No results found

    மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் தப்பிக்க முடியாது- வானதி சீனிவாசன்


    பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. குற்றம்சாட்டியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தினார்.

    தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. மத்தியில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வரும் பா.ஜ.க அரசு, சட்டத்தின்படியே, அனைத்தையும் செய்து வருகிறது. அதன்படிதான், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இதனை ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என பழிசுமத்தி, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை திசை திருப்பும் முயற்சியில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

    அ.தி.மு.க.வில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, தி.மு.க.வில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா? தி.மு.க.வின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா?. செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது. அதைவிடுத்து, நாங்கள் என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வோம். அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் தடுப்போம் என்றால் அதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அனுமதிக்காது. பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உணர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال